புதுவை ஷூ நிறுவனத்தில் ரூ.7.40 லட்சம் மோசடி

புதுச்சேரி, பிப். 19:  புதுவையில் பிரபல ஷூ நிறுவனத்தில் ரூ.7.40 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த மேலாளரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நேரு வீதியில் தனியார் காலணி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பு அதிகாரியாக சீனுவாசலு கிருஷ்ணன் உள்ளார். அதே நிறுவனத்தில் மேலாளராக சேலம் கொல்லப்பட்டி ஏரிக்கரை அவென்யூ பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பணியாற்றினார். அவர் வேலை செய்த 2016 பிப்ரவரி முதல் 2017 ஜனவரி மாத இடையிலான காலத்தில் அந்நிறுவனத்தில் இருந்து வேறொரு கம்பெனிக்கு ரூ.7.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி ஆனதாக கூறப்படுகிறது. இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் காசோலையாக மேலாளர் சதீஷிடம் வழங்கிய நிலையில் அதை அவர் தனது நிறுவன வங்கி கணக்கில் வரவு வைக்காமல் சொந்த கணக்கிற்கு காசோலையை மாற்றி மோசடி செய்தாராம். இதனிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ெபாறுப்பு அதிகாரிகள் கணக்கு வழக்குகளை ஆடிட்டிங் செய்தபோது பணமோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்து சதீஷிடம் கேட்டபோது அவர் பணியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இது பற்றி புதுச்சேரி நீதிமன்றத்தில் சீனுவாசலு தரப்பில் முறையிடப்பட்டது. அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரிக்க பெரியகடை  போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சதீஷ் மீது மோசடி பிரிவில் 2019, ஜூன் மாதம் வழக்குபதிந்த பெரியகடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அவரை தேடி வந்தனர். கடந்த 8 மாதமாக அவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில், இதுதொடர்பான விசாரணைக்கு காவல் நிலையம் ஆஜராகுமாறு அவருக்கு சமீபத்தில் போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் அவர் கடந்த 15ம் தேதி பெரியகடை காவல் நிலையத்தில் ஆஜரான நிலையில் இந்த மோசடி தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது மோசடியில் அவர் ஈடுபட்டது உறுதியான நிலையில், அவரை உடனடியாக கைது செய்த போலீசார் சதீசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: