புதுவை, காரைக்கால் விவசாயிகளிடம் இருந்து 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் மத்திய அரசு அனுமதி

புதுச்சேரி, பிப். 19: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் பாலகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நெல் சாகுபடி பெரும்பாலான நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரம நெல் சாகுபடியையே சார்ந்துள்ளது. நடப்பு ஆண்டில், புதுவை பகுதியில் சம்பா சாகுபடியில் 8 ஆயிரம் ஹெக்டேரும், காரைக்கால் பகுதியில் தாளடி பருவத்தில் 7 ஆயிரம் ஹெக்டேரும் பயிரிடப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டு, 55 ஆயிரம் டன் நெல் உற்பத்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தியில் புதுவை பகுதியில் 29,600 டன்னும், காரை பகுதியில் 25,900 டன்னும் அடங்கும். நடப்பாண்டு தட்பவெப்ப நிலையினாலும், அதிக உற்பத்தியினாலும் மற்றும் ஒருசில பயிர் மேலாண்மை காரணங்களாலும், நெல்லுக்குண்டான விலை பொதுவாக குறைந்தே காணப்படுகிறது. ஏற்கனவே, பல காரணங்களால் விவசாயிகள் நஷ்டத்தை எதிர் கொண்டிருக்கும் வேளையில் குறைந்த கொள்முதல் விலை, விவசாயிகளின் ெபாருளாதார சுமையை கூட்டியுள்ளது.

குறைந்த கொள்முதல் விலையால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் பொருட்டு, முதல்வர், மத்திய அரசின் உணவு வாணிப கழகத்தின் (எப்சிஐ) மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவரது கோரிக்கையினை ஏற்று, மத்திய நுகர்வோர் மற்றும் பொதுவிநியோக அமைச்சகம், புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் நடப்பு காரி பருவத்திற்கு விவசாயிகளிடம் இருந்து 30 ஆயிரம் டன் அளவுக்கு நேரடியாக நெல் கொள்முதல் செய்ய, உணவு வாணிப கழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து, புதுச்சேரி அரசின் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, புதுச்சேரியில் புதுவை விற்பனை குழுவின் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கரையாம்புத்தூர், கூனிச்சம்பட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், திருவாண்டார்கோவிலில் உள்ள உணவு வாணிப கழகத்தின் கிடங்கு மற்றும் காரைக்காலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தென்னங்குடி நவீன அரிசி ஆலை, நெடுங்காடு தொடக்க கூட்டுறவு வேளாண்மை மையம் ஆகிய 8 இடங்களை நேரடி கொள்முதல் நிலையங்கள் என அறிவித்துள்ளது.

இந்த நேரடி நெல் கொள்முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது பொருட்களை அறிவிக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைக்கப்பட இருக்கும் பிரத்யேக பிரிவில் கொண்டுவந்து, உணவு வாணிப கழகத்தின் தர நிர்ணய கோட்பாடுகளுக்கும் உட்பட்டு இருக்கும்பட்சத்தில் ஆவணங்கள் சமர்ப்பித்து ரகங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையினை பெறலாம். ஒரே நேரத்தில் அனைவரும் வந்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பதிவு அவசியம் என உணவு வாணிப கழகம் அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த கொள்முதல் நிலையங்களில் வரும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு வேளாண் துறையின் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உழவர் உதவியகங்களை அணுகலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: