×

சின்னசேலம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்

சின்னசேலம், பிப். 19: குறுகிய இடத்தில் அமைந்திருக்கும் சின்னசேலம் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் நலன்கருதி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் நடந்த பட்ஜெட் விவாத கூட்டத்தில் பிரபு எம்எல்ஏ பேசினார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் விவாத கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபு பேசியதாவது: தாலுகா தலைநகரமான சின்னசேலத்தில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் சின்னசேலத்தின் வழியாக சேலம், சென்னை, பாண்டி போன்ற பெருநகரங்களுக்கும், கிராம பகுதிகளுக்கும் பேருந்துகள் சென்று வருகிறது. இந்த பேருந்துகள் பஸ்நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கி விட்டு, பின் ஏற்றி செல்லும் வகையில் போதுமான இடவசதி இல்லை. ஆகையால் சின்னசேலம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் சின்னசேலம் தாலுகாவாகி 3ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. இதனால் சின்னசேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து குற்றவாளி என அறியப்படுபவர்களை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சின்னசேலத்தில் நீதிமன்றமும் அமைக்க வேண்டும்.

அதைப்போல நயினார்பாளையத்தை சுற்றி கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் நயினார்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பதுடன், உலகியநல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் குறுவட்டம் அமைக்க வேண்டும். மேலும் சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள கூகையூர், நயினார்பாளையம், மேல்நாரியப்பனூர் ஆகிய 3 ஊராட்சிகளையும் சிறப்பு நிலை ஊராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கள்ளக்குறிச்சியில் இருந்து பெரம்பலூர் செல்ல சின்னசேலம், தோட்டப்பாடி, பெத்தாசமுத்திரம், வீ.அலம்பளம், கூகையூர் வழியாக புதிய பேருந்து வழித்தடம் அமைத்து பேருந்துகளை இயக்க வேண்டும்.அதைப்போல கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் மழை காலத்தில் அதிக நீரை சேமித்து வைக்க முடியவில்லை. எனவே அங்கு ஒரு  புதிய தடுப்பணை கட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chinnasalem ,bus station ,
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது