வளத்தியில் பரபரப்பு டிரான்ஸ்பார்மரை காணவில்லை

மேல்மலையனூர், பிப்.19: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தேரி கிராமத்தில் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று வளத்தி காவல் நிலையத்தில் சித்தேரி கிராம விவசாயிகள் ஒன்றிணைந்து புகார் மனு அளித்தனர். அதில், சித்தேரி கிராமத்தில் உள்ள ஜூலியன்குட்டை அருகே மின்சார துறையின் சார்பாக கிராமத்தில் 63 கேவி மற்றும் 100 கேவி திறன் கொண்ட மின்மாற்றிகள் ஒரே மின் கம்பங்களில் வைக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி முதல் 63 கேவி அளவு கொண்ட டிரான்ஸ்பார்மர் காணாமல் போனது. இதுகுறித்து  மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதுபற்றி சரியான தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை. எனவே  காணாமல் போன டிரான்ஸ்பார்மரை போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், டிரான்ஸ்பார்மர் தொலைந்துபோனதால் குறைவான மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வராததால், காணாமல் போன மின்மாற்றியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றனர். டிரான்ஸ்பார்மர் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் விவசாயிகள்  விசித்திரமான புகார் கொடுத்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: