×

கோரிக்கைகளை வலியுறுத்தி 27ம் தேதி ஆர்ப்பாட்டம்

கடலூர், பிப். 19: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் வருகிற 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கடலூர் டவுன்ஹாலில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது: 16 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதிய விகிதம் வழங்க வேண்டும். அரசால் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வருபவர்களை காலியாக உள்ள இதர துறை பணியிடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். தமிழக பட்ஜெட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்ஜெட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கவில்லை. இது ஏமாற்றமளிக்கிறது.

சென்னையில் டாஸ்மாக் கடைகளில் அன்றையதினம் வசூலாகும் பணத்தை அதிகாரிகள் நேரில் சென்று பெற்றுக்கொள்கின்றனர். இதுபோன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் நேரில் சென்று டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் 5 மண்டலங்களான சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வருகிற 27ஆம் தேதி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். அப்போது தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் அல்லிமுத்து, செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்