×

வணக்கம் சொன்னால் வைரஸ் பரவாது கலெக்டர் தகவல்

காரைக்குடி, பிப். 19: கைகொடுப்பதை தவிர்த்து தமிழ் கலாச்சாரம் படி வணக்கம் சொன்னால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆரோக்கிய மையம், மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பதிவாளர் குருமல்லேஷ்பிரபு வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘அறிவியல் வளர்ச்சி ஒருபுறம் வாழ்நாளை அதிகரித்துள்ளது. நம்மை பாதுகாக்க உதவுகிறது. விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் ஒரு நாட்டில் இருந்து உலகில் எந்த ஒரு பகுதிக்கும் எளிதில் செய்ய வசதிகள் பெருகிவிட்டன. அதன்மூலம் எங்கோ பரவும் வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பாக அமைகிறது. அதுபோன்று தான் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 25 நாடுகளுக்கு பரவி உள்ளது. வைரஸ் பரவுவதில் இருந்து நம்மை காத்து கொள்ள விழிப்புணர்வு அவசியம். பல்கலைக்கழகம் தத்துதெடுத்துள்ள 80 கிராமங்களிலும் மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கைகளை தினமும் சோப்பு போட்டு 15 முறை கழுவ வேண்டும். நோய் வந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும். மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது’ என்றார்.  

மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கி வைத்து பேசுகையில், ‘சீனாவில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு 92 பேர் வந்துள்ளனர். இவர்களுக்கு விமானநிலையத்தில் பல்வேறு பரிசோதனை செய்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்கும் சென்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. கை கொடுப்பதல் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் வைரஸ் பரவும். நமது தமிழ் காலச்சார பழக்கம்படி வணக்கம் சொன்னால் வைரஸ் பரவாது. ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் எந்த நோய் தாக்குதலும் உடனடியாக வராது. நோய் தாக்கதலில் இருந்து காத்து கொள்ள உடற்பயிற்சி அவசியம். மலை ஏறினால் சுவாச பிரச்னைகள் வராது. சுகாதாரமாக இருந்தால் எந்த வைரஸ் தாக்குதலும் வராது’ என்றார்.  இதில் மாவட்ட சுகாதரதுறை துணை இயக்குநர் யசோதா மணி, தொற்றுநோய் மருத்துவர் ஆனந்த், பூச்சியியல் துறை வல்லுநர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர் ஆனந்தி நன்றி கூறினார்.

Tags :
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி