×

வெளிநாடு செல்பவர்கள் தூதரகங்களில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, பிப்.19:  வெளிநாடுகளுக்கு சென்ற உடனேயே இந்திய தூதரகம், துணை தூதரகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த் துறை சார்பில் புலம் பெயரும் தொழிலாளர்கள் பயண முன்னேற்றத்திற்கான முதன்மைப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அரசு விதிகளை கடைபிடித்து செயல்பட போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிற்கு வேலைத் தேடி செல்பவர்கள் முறையாக அனுமதிபெற்று பயணம் மேற் கொள்ள வேண்டும். அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தன்வசம் கூடுதலாக வைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் பிரச்னைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக இந்திய தூதரகத்தை அணுக வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது. உள்ளூர் அலுவலகங்களில் முறையான அனுமதியின்றி வேறு நிறுவனத்திலோ, முகவர்களிடமோ வேலைக்கு செல்லக்கூடாது. பணிபுரியும் இடம், நிறுவனம் முகவரி, தொலைபேசி எண் உட்பட அனைத்து விவரங்களையும் வீட்டு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

வெளி நாடுகளுக்கு பணிக்கு சென்ற உடனேயே இந்திய தூதரகத்தை அல்லது துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். புலம்பெயர் மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்கு 11 மொழிகளில் தேவையான தகவல்களை 24 மணி நேர உதவி சேவையை வெளிநாடு வாழ் இந்தியருக்கான உதவி மையம் வழங்குகிறது. இவ்வாறு பேசினார். வெளிநாடு செல்பவர்கள் கட்டண தொலைபேசி எண் 91 11 40503090, 45680197, 26885021, கட்டணமில்லா தொலைபேசி எண்1800113090, helpline@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளில் உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், பேராசிரியர் வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Tags : Foreigners ,Embassies ,
× RELATED ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 வெளிநாட்டினர் கைது