பொருட்களின் எடையே குறைத்து மக்களை ஏமாற்றும் வியாபாரிகள் தொழிலாளர் துறையினர் கண்காணிப்பார்களா?

மதுரை, பிப். 19: மதுரை மாவட்டத்தில் எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளை தொழிலாளர் துறையினர் தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏராளமான மளிகை, பெட்டிக்கடைகளில் பொருட்கள் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. பெட்டிகடைகளில் அனுமதியற்ற பொருட்கள் விற்பது, தள்ளுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் வைத்து தரமில்லாத பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பது. எடை குறைவாக வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக நுகர்வோர் அமைப்புகள் புகார் தெரிவிக்கிறது. குறிப்பாக, முக்கிய இடங்களை தவிர்த்து, தெருவுக்குள் உள்ள கடைகளிலேயே இந்த முறைகேடுகள் அதிக அளவில் நடக்கிறது.

* மதுரையைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, ``மதுரை நகர் பகுதியில் பலவேறு இடங்களில், கடைகளில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பொருட்களில், பொட்டல பொருட்கள் விதிகளின்படி, அந்தப்பொருட்களை தயாரித்த நிறுவனத்தின் முகவரி, அந்த பொருளை விற்க அனுமதி பெற்றுள்ளதா? என்ற விபரம், பேக் செய்த தேதி, பொருளின் எடை அல்லது எண்ணிக்கை, காலாவதி தேதி மற்றும் அதிகபட்ச விலை போன்ற விபரங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் இதில் ஒன்றிரண்டு விபரங்கள் இல்லாமலோ அல்லது அனைத்து விபரங்களும் இல்லாமலோ பல கடைகளில் பாக்கெட் பொருட்கள் விற்கப்படுகிறது. காய்கறி, மீன் மார்க்கெட், கறிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில், முத்திரையிடப்படாத தராசுகள் மற்றும் எடை அளவைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகளை தொழிலாளர் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதில்லை. இதனால், ஒரு தடவை, தொழிலாளர் துறையினர் சோதனைக்கு வந்துவிட்டால், அடுத்து வருவதற்கு 3 மாதமோ, 6 மாதமோ ஆகலாம் என நினைத்து, தொடர்ந்து மோசடிகள் தொடர்கிறது. இதனால், தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதோடு, விலையில் மோசடி தொடர்கிறது. எனவே இதுபோன்ற ஏமாற்று பேர்விழிகளை தொழிலாளர் துறையினர் தொடர்ந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்தால், பொதுமக்களை காப்பாற்றலாம்’’ என்றனர்.

Related Stories: