×

திருச்சி மேலகல்கண்டார்கோட்டையில் குழாய் உடைப்பில் வெளியேறிய குடிநீர் சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கும் அவலம் அதிகாரி அலட்சிய பதில்: பொதுமக்கள் அதிருப்தி

ஏர்போர்ட், பிப்.19: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மெயின் ரோட்டிலுள்ள மெகா பள்ளத்தில் குழாய் உடைப்பிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறி தேங்கி போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. இது பற்றி புகார் அளிக்க சென்ற பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் அலட்சியமாக பதிலளித்ததால் அப்பகுதியினர் அதிருப்தியடைந்தனர்.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 31வது வார்டு மேலகல்கண்டார்கோட்டை காமராஜர் ரோடு பஞ்சாயத்து போர்டு அருகில் நீண்ட நாட்களாக மெயின் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் சிலருக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் மிகப் பெரிய பள்ளத்தினால் ரோட்டினை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் திணறுவதோடு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் குடிநீர் வீணாவதால் தெரு குழாய்களில் தண்ணீர் சரியாக வருவதில்லை. இது பற்றி புகார் அளிக்க சென்ற பொதுமக்களிடம் பள்ளம் இன்னும் பெரியதாக ஆகட்டும், அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும், இதை போட்டோ எடுத்து செய்தி வந்தால் அதன் மூலமாவது இந்த ஊரில் இருந்து வேற ஊருக்கு மாறி செல்கிறேன் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் அலட்சியமாக பதில் கூறியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இனிமேலும் இந்த குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் சாலை பள்ளத்தை மூடி சீரமைக்காவிட்டால் பகுதி மக்களை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவதோடு, மாநகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்தனர்.

Tags : Trichy Melakalkandarkotti ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை