×

பெரியகருப்பூரில் இன்று நடக்கிறது வேளாண்துறையின் மண்வள அட்டை தினம்

திருச்சி, பிப்.19: திருச்சி அருகே பெரியகருப்பூரில் தேசிய மண்வள இயக்கம் திட்டத்தின் கீழ் இன்று மண்வள அட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் 2019-20ம் ஆண்டு திருச்சி மாவட்டத்திலுள்ள 14 வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்திற்கு ஒரு செயல்விளக்கக் கிராமம் வீதம் 14 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த 14 கிராமங்களிலும் அனைத்து விவசாயிகளின் நிலங்களிலும், விவசாயிகளது பங்களிப்புடன் மொத்தம் 2,612 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு திருச்சி மண் பரிசோதனை ஆய்வகத்தில் முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 905 விவசாயிகளுக்கு 620 ஹெக்டருக்கு செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கு ஹெக்டருக்கு ரூ.2500 வீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் உயிர் உரங்கள்,நுண்ணூட்டக்கலவை, தொழுஉரம், மற்றும் ராசாயன உரங்கள் வாங்கிப் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மண்வள அட்டையினைப் பயன்படுத்தி உரச்செலவினை குறைப்பதுடன் தேவைக்கு அதிகமாக உரங்கள் வாங்கி தேவையற்ற செலவினைத் தவிர்த்து, அதிக மகசூல் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட அளவில் அந்தநல்லூர் வட்டாரம் பெரியகருப்பூர் கிராமத்தில் இன்று (19ம் தேதி) மண்வள அட்டை தினம் திருச்சி மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் சிறுகமணி அறிவியல் மைய விஞ்ஞானிகள் தலைமையில் நடைபெறுகிறது.மீதமுள்ள 13 வட்டாரங்களில் உள்ள செயல்விளக்க கிராமங்களில் மண்வள அட்டை தினம் குறித்த கூட்டம் நடத்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2020-2021ம் நிதியாண்டில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 5 கிராமம் வீதம் மொத்தம் 70 கிராமங்களில் செயல்விளக்கத்திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டு கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.



Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி