சிறுகமணி காவிரி ஆற்றிலிருந்து

திருச்சி, பிப்.19: சிறுகமணி காவிரி ஆற்றிலிருந்து திருச்சி ஜங்ஷனுக்கு தினமும் 6.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல மீண்டும் ஆழ்துணை கிணறு அமைக்க முயற்சிப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் நடத்தவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு தினமும் தேவையான 6.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் சிறுகமணி அருகே உள்ள காவல்காரப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் கடந்த ஆண்டு ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.இந்நிலையில் இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் மீண்டும் முயற்சிப்பதை தடுத்து நிறுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ரங்கம் தாசில்தார் முன்னிலையில் சிறுகமணி பேரூராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சிறுகமணி பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் காலை வந்தனர். ஆனால் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவில்லை. மாலை 3 மணிக்கு ரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த மக்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் புறக்கணித்து, சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணியிடம் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்துச் சென்றனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் உள்ள 2,500 ஏக்கர் விளை நிலங்களில் ஆண்டுக்கு 25 ஆயிரம் டன் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் ஏற்கனவே டிஎன்பிஎல் மணப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டம், பெட்டவாய்த்தலை முதல் முக்கொம்பு வரை பஞ்சாயத்து குடிநீர் தேவை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் குடிநீர் தேவைக்கு இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தால் 10 கி.மீ. சுற்றளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே இப்பகுதியில் புதிதாக குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் இணைந்த குழு அமைக்க வேண்டும். அனைத்து நீர் நிலைகளையும் சர்வே செய்து அத்துக்கல் போட்டுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பலமுறை அளித்தும் அதிகாரிகள் நிறைவேற்றித் தராததால் அமைதி பேச்சுவார்த்தையை புறக்கணிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories: