விடுதலை போராட்ட வீரர்களுக்கு அரசு, தனியார் பேருந்துகளில் கட்டண சலுகை அளிக்க வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

கும்பகோணம், பிப். 19:

தஞ்சை கலெக்டர் கோவிந்தராவுக்கு மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி ஆராய்ச்சி மையங்களிலும் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழா நினைவாக மகாத்மா காந்தியின் முழு உருவச்சிலை அமைத்து அவரது நினைவை போற்ற வேண்டும். இதற்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டும்.இந்தியாவின் விடுதலைக்காக 25 வயதுக்குள் தூக்கிலிடப்பட்டு இறந்த விடுதலை போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் வருகிற கல்வியாண்டில் கட்டாயம் இடம் பெற அரசாணை வெளியிட வேண்டும். மாவட்டத்தில் புதிதாக அமைத்துள்ள, அமைக்கப்படவுள்ள அனைத்து நகர்கள் மற்றும் குடியிருப்பு நகர்களில் உள்ள சாலைகள், வீதிகள் மற்றும் தெருக்களுக்கு மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு, பாரதியார், காமராசர், தில்லையாடி வள்ளியம்மை, வீரபாண்டிய கட்டபொம்மன், குமரப்பா, வஉசிதம்பரனார், அப்துல் கலாம் ஆசாத் போன்ற விடுதலை போராட்ட தலைவர்களின் பெயர்களை இடப்பட்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை பதிவேடுகளில் இடம்பெற அரசாணை வெளியிட வேண்டும்.

விடுதலை போராட்ட வீரர்களுக்கு ரயில் கட்டண சலுகை, பயணச்சீட்டு முன்னுரிமை அளிப்பது போன்று தமிழக அரசு, அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டண சலுகை அளிக்க வேண்டும். நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் விதி 110ன்கீழ் இதை அறிவிக்க வேண்டும். தகுதியுள்ள விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு புறம்போக்கு நிலம் 5 ஏக்கர் ஒதுக்கி தர வேண்டும்.கடந்தாண்டு அக்டோபர் 30ம் தேதி கலெக்டர் அண்ணாதுரையிடம் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது 120 நாட்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதிய, இன, மத மோதல், சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் மதுபோதை பழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி நிரந்தர மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: