×

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையை பின்பற்றினால் பயறுவகை பயிர்களில் இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம்

கும்பகோணம், பிப். 19: கும்பகோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் தரிசு மற்றும் கோடை பருவத்தில் குறைந்த செலவில் குறைந்த நாட்களில் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற விவசாயிகள் அனைவரும் பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையை பின்பற்றி பயறுவகை பயிர் சாகுபடி செய்து உற்பத்தியை பெருக்க வேண்டும். விவசாயிகளே விதை உற்பத்தி செய்து விதை விநியோகம் செய்யலாம். பயறுவகை பயிர்களின் நடப்பு நெல் தரிசு மற்றும் கோடை பட்டம் பயிர் சாகுபடி உளுந்து ரகங்களான ஆடுதுறை வம்பன் ஆகிய ரகங்களை தேர்வு செய்து விவசாயிகள் விதை நோ்த்தி செய்து வரிசை நடவு செய்யலாம்.மேலும் மக்கிய தொழுஉரம் ஒரு ஏக்கருக்கு 5 டன் இட வேண்டும். விளை நிலங்களில் மண் வளத்தை பாதுகாக்க பண்ணைக்கழிவு பயன்படுத்துவதால் ரசாயன உரங்கள் இடுவதை தவிர்த்து கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் மண் பரிசோதனை மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். பூஞ்சான விதை நேர்த்தியான சூடோமோனாஸ் டிவிரிடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம், டிரைக்கோடொமாவிரிடி 4 கிராம், ரைசோபியம் 200 கிராம் ஆகியவற்றை விதை நேர்த்தி செய்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ஒருங்கிணைந்த உர மேலாண்மை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ யூரியா, 20 கிலோ சூப்பர் பாஸ்பேட், 10 கிலோ பொட்டாஷ், 8 கிலோ சல்பர் ஆகியவற்றை அடி உரமாக இட்டு அதிக மகசூலை பெறலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல் ஒரு ஏக்கருக்கு 250 மிலி தெளித்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பயறுவகை பயிர்களில் இலைவழி உரங்களான டிஏபி மற்றும் எம்ஏபி உரங்களை 2 சதவீதம் உரத்தை கைதெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும். பயறுவகை பயிர்களின் பூ பிடிக்கும் தருணம், காய் பிடிக்கும் தருணத்திலும் தெளித்து அதிக மகசூலை பெருக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற தமிழக அரசால் அறிமுகப்படுத்தபட்ட நுண்ணீர் பாசன திட்டத்தை மானிய விலையில் பெற்று உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். வட்டார வேளாண்மை விரிவாக்க மையமான கும்பகோணம், சுவாமிமலை, கொற்கை, சோழபுரம் மற்றும் கொத்தங்குடி ஆகிய கிடங்குகளில் வேளாண் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...