பருத்தி சாகுபடியில் அதிக விளைச்சல் பெற இயற்கை உரமான சாம்பல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

கும்பகோணம், பிப். 19: கும்பகோணம் பகுதியில் பருத்தி சாகுபடியில் அதிக விளைச்சல் பெற இயற்கை உரமான சாம்பல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்தியாவில் பருத்தி முக்கியமான விவசாய பயிராக உள்ளது. கரிசல், வண்டல், செம்மண்ணில் பருத்தி செடிகள் நன்கு வளரும் தன்மை கொண்டது. இந்த பருத்தி கோடைகால பயிராக பிப்ரவரி- மார்ச் மாதத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்காக 3 மீட்டர் இடைவெளிகளில் 3 சென்டி மீட்டர் ஆழத்துக்கு சிறு பாத்திகள் அமைத்து அதற்கு நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு பாத்திகளிலும் 2 மீட்டர் இடைவெளிகளில் விதைகளை நன்றாக ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.மண்ணில் வளம் குறைந்த இடங்களிலும், வெயில் குறைவான இடங்களிலும் இரண்டு விதை விதைக்கலாம்.விதைத்த 10வது நாள் முளைக்காமல் இருக்கும் இடத்தில் வேறு ஒரு விதையை ஊன்றலாம். இதனால் அங்காங்கே முளைக்காமல் இருக்கும் இடங்களில் நடும்பொழுது பருத்தியை செடியை பராமரிக்க முடியும். ஒரு மாதம் வரை 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி முளைத்த பின்பு வாரத்துக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. மாதத்துக்கு ஒருமுறை தேவையற்ற களைகளை நீக்க வேண்டும். தழைசத்துக்கள் அதிகமாக இடும்போது வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

இதனால் நுனிகளை கிள்ளி விடும்போது பக்க கிளைகள் அதிகம் வளரும். பூக்கள், காய்களும் அதிகம் காய்க்கும். பருத்தியின் இலையும் மொட்டும் மருத்துவ குணங்கள் கொண்டவையாகும்.இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், சுவாமிமலை, இன்னம்பூர், ஆவூர், பட்டீஸ்வரம், திருக்கரூகாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் 1,000 ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யவுள்ளனர். இதற்காக பருத்தி செடிகளில் அதிகமான காய்கள் காய்த்து பூக்க வேண்டும் என்பதால் தாளடி அறுவடை நடந்த வயலில் அடியுரமாக சாம்பலை வயல் முழுவதும் வீசி வருகின்றனர். இதனால் பருத்திகள் அதிக எடை மற்றும் நீளத்துடன் நிறம் மாறாமல் அடர்த்தியாக இருக்கும் என்று பருத்தி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: