தமிழக முதல்வர் கோப்பைக்கான தஞ்சை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி துவக்கம்

தஞ்சை, பிப். 19: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று முதல் நாளை வரை தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. தொடக்க நாளான நேற்று கூடைப்பந்து, வாலிபால், கபடி, ஹாக்கி, ஜூடோ, இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் போட்டிகள் நடந்தது.கூடைப்பந்து போட்டியில் 11 ஆண்கள் அணி, 8 பெண்கள் அணியும், ஹாக்கி போட்டியில் 4 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணியும், கபடி போட்டியில் 11 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணியும், இறகுப்பந்து போட்டியில் 20 ஆண்கள், 12 பெண்கள், டென்னிஸ் விளையாட்டில் 4 ஆண்கள் அணி, 2 பெண்கள் அணி, ஜூடோ போட்டியில் 16 ஆண்கள், 27 பெண்கள் என மொத்தம் 915 பேர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.1,000, 2ம் பரிசாக ரூ.750, 3ம் பரிசாக ரூ.500 என மொத்தம் ரூ.4.53 லட்சம் வழங்கப்படவுள்ளது. குழு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளில் சிறந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். தடகளம், நீச்சல், குத்துச்சண்டை, ஜூடோ ஆகிய விளையாட்டில் முதல் 3 இடத்தை பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவர். மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதமும், 2ம் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், 3ம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்றார். மாவட்ட வாலிபால் பயிற்றுனர் மகேஷ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: