திருக்காட்டுப்பள்ளியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

திருக்காட்டுப்பள்ளி, பிப். 19: திருக்காட்டுப்பள்ளியில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யப்படுவதை முறைப்படுத்த வேண்டும் என்று பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஸ்டேஜ் வாரியாக எவ்வளவு கட்டணம் என்பதை அரசு அறிவித்திருந்தது. ஆனால் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிந்து பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பினர் தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக அரசு நிர்ணயம் செய்த கட்டண விகிதங்களை பெற்றனர்.இதில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பூதலூருக்கு ரூ.7 என்றும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து செங்கிப்பட்டிக்கு ரூ.11 என்றும் அரசு கட்டணம் நிர்ணயம் செய்திருந்தது.

ஆனால் அரசு, தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக பூதலூருக்கு ரூ.10, செங்கிப்பட்டிக்கு ரூ.14 கட்டணம் வசூல் செய்கின்றனர்.இதுகுறித்து ஒரு பயணி கடந்த 2ம் தேதி அரசு பஸ் எண்.476பி-ல் ஏன் கூடுதலாக கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டு விசாரிக்க கடந்த 15ம் தேதி அரசு பஸ் திருவையாறு கிளை மேலாளர் பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இனி உரிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து 17ம் தேதி முதல் அந்த பேருந்தில் சரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மற்ற கிளை மேலாளர்கள், தனியார் பேருந்துகளுக்கும் தெரிவித்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றும் திருக்காட்டுப்பள்ளி கண்ட்ரோலரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சரியான கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: