கழிவுநீர் கலந்ததால் 12 பேருக்கு வாந்தி, மயக்கம் நகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறுவோம்

கும்பகோணம், பிப். 19: கும்பகோணம் ஆணைக்காரன்பாளையத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுக்காவி–்ட்டால் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறுவோம் என்று பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆணைக்காரன்பாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆணைக்காரன்பாளையத்தில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் உடைந்து கழிவுநீர் ஆறாக தெருவில் ஓடியது. நாளடைவில் அனைத்து மேன்ஹோல்களும் உடைந்து கழிவுநீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

ஆனால் நகராட்சி நிர்வாகம், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் ஆணைக்காரன்பாளையம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்களின் பிறப்பிடமாக மாறி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 7 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று காலை கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் ரேவதி (31), பிரியா (33), சுமதி (33), வாசுகி (35), லதா (37) ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் சேர்த்தனர்.இந்த தகவல் கிடைத்ததும் ஆணைக்காரன்பாளையத்தில் நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி பொறியாளர் ஜெகதீசன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சுகாதார பணியாளர்கள் சோதனை செய்தனர். அப்போது வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதா, தற்போது இருப்பவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சக்தி கூறுகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீ–்ர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளங்களை தோண்டும்போது கழிவுநீர் செல்லும் குழாய் உடைந்துள்ளது. அதை பார்க்காமல் குடிநீர் குழாயை பதித்து மூடிவிட்டனர். இதனால் ஆணைக்காரன்பாளையத்துக்கு வரும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளாமல் எங்கள் பகுதியை அலட்சியப்படுத்தினர். நகராட்சி அலுவலகத்துக்கு சென்று குறை கூறினால் அலைகழிக்கின்றனர்.இதேபோல் ஆணைக்காரன்பாளையத்தில் உள்ள அனைத்து பாதாள சாக்கடை மேன்ஹோல்களும் உடைந்து கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அவல நிலையால் கழிவுநீருடன் கலந்து குடிநீ–்ர் வந்தது தெரியாமல் அப்பகுதி மக்கள் பயன்படுத்தியதால் 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆணைக்காரன்பாளையத்தில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல்களை சீரமைப்பதுடன் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தை காலி செய்து விட்டு நகராட்சி அலுவலகத்தில் குடியேறுவோம் என்றார்.

Related Stories: