×

குளத்தின் கரையில் கட்டியிருந்த 3 வீடுகளின் சுவர் இடிந்து தண்ணீரில் விழுந்தது அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்

நாகை,பிப்.19: நாகையில் குளத்தின் கரையில் கட்டியிருந்த 3 வீடுகளின் பின்பக்க சுவர் நேற்று திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.நாகை வெளிப்பாளையம் சிவன் கோயில் வடகரையில் 6க்கும் அதிகமான வீடுகள் கடந்த 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக உள்ளது. இந்த வீடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் செய்பவர்களாகவே உள்ளனர். நாகை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக சிவன் கோயில் குளத்தில் முழுவதுமாக தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் குளத்தின் வடகரையில் வசிக்கும் சலவை தொழிலாளி கண்ணன்(64), பழைய துணிகள் விற்பனை செய்யும் ஆனந்த்(55), பெயிண்டர் சங்கர்(55) ஆகிய 3 பேரின் பின்பக்க சுவர் திடீரென அடுத்தடுத்து சரிந்து குளத்தின் உள்ளே விழுந்தது. நேற்று காலை நேரத்தில் குடிநீர் பிடிக்க வீட்டை விட்டு வெளியில் வந்ததால் வீடுகளில் வசித்தவர்களுக்கு உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரம் என அனைத்தும் மளமளவென குளத்தின் தண்ணீரில் மூழ்கியது.

பல ஆண்டு காலம் வசித்த தங்களது வீடுகளின் சுவர் பெயர்ந்து கண் முன்னால் குளத்து நீரில் விழுவதை பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அதே நேரத்தில் தண்ணீரில் விழுந்த பொருட்களையும் எடுக்க முடியாமல் தவிர்த்தனர். சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து தாசில்தார் பிரான்சிஸ், நகராட்சி ஆணையர் ஏகராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags : houses ,bank ,pond ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...