×

தாந்தோணிமலை பிரதான கடைவீதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையால் பொதுமக்களுக்கு இடையூறு

கரூர், பிப். 19: கரூர் தாந்தோணிமலை பிரதான கடைவீதியோரம் செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.கரூர் நகராட்சி பகுதியை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் விளைநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளிலும், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது.இதில் கருர் சுங்ககேட் பகுதியில் இருந்து தாந்தோணிமலை செல்லும் பிரதான சாலையோரம் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், எஸ்பி அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் தாந்தோணிமலையில் உள்ளன.அனைத்து அதிகாரிகளும் இந்த சாலையின் வழியாகத்தான் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தாந்தோணிமலை சாலையோரம் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையினால் பல்வேறு தொந்தரவுகளை பொதுமக்கள் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியும் செயல்பட்டு வருகிறது. அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட இந்த வங்கிக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடை வங்கியின் அருகே செயல்படுவதாலும் வங்கிக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களும் சிரமங்களை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.குடித்து விட்டு சாலையில் மயங்கி கிடப்பது, வரும் வாகன ஓட்டிகளை மறித்து தகராறில் ஈடுபடுவது, அதிக வேகத்துடன் இதே சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது என்பன போன்ற காரியங்களால் அனைத்து தரப்பினர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே முக்கிய சாலையோரம் உள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான சீரமைப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : public ,road ,Tasmaq Liquor Store ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...