×

அரசு அறிவித்து 5 ஆண்டுகள் கடந்தாச்சு குருக்கள்பட்டியில் தொழிற்பேட்டை அமையுமா?

தென்காசி, பிப். 19:  குருவிகுளத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து 5 ஆண்டுகள் கடந்தும் எவ்வித பணிகளும் துவங்காததால் படித்த கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுவதாக மதிமுக சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராசேந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் ராம உதயசூரியன், சீனிவாசன், தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், விவசாய அணி ராகவன், வக்கீல் சுப்பையா, ஜோதிராஜ், ராஜகோபால், காளிராஜ், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளனை நேரில் சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது ஒன்றிய பிரிவினைக்கு பிறகு 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் புதிதாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஒன்றிய குழு பட்டியலின்படி 17 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தான் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போது பொதுமக்களின் கருத்து அறிந்து இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்ட 20 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் தற்போது ஒன்றிய பிரிவினை பற்றி 2 ஒன்றிய குழுவை தவிர்த்து எஞ்சிய 18 ஒன்றிய குழுவை உள்ளாட்சி தேர்தலுக்குரிய  பட்டியலாக வெளியிட வேண்டும்.

செங்கோட்டை தாலுகா புளியரை கிராமம் கேரளா தமிழ்நாடு எல்லையில் நுழைவு வாயிலாக திகழ்கின்றது. இந்த வழித்தடத்தில் கேரளாவிலிருந்து கேடு விளைவிக்கும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு அழுகிய துர்நாற்றம் வீசும் கழிவுப்பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் குவித்து விட்டு செல்கின்றனர். இதனால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு ஆபத்தான பல தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பும் சுற்றுச்சூழல் முற்றிலும் கெட்டுப் போகும் நிலையும் ஏற்படுகிறது.அதேபோல தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளத்தனமாக விற்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் இருந்து மணல், ஜல்லி, கற்கள் உட்பட கட்டுமான பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகவும் தெரிகிறது. எனவே புளியரையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வளாகம் அமைத்திடவும், நேர்மையான அலுவலர்களை பணியில் அமர்த்தவும், அவ்வபோது லஞ்ச ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு துறையின் நேரடி பார்வையில் இயங்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம் தமிழகத்திலேயே வறட்சியான ஒன்றியங்களில் ஒன்றாகும்.  இந்த ஒன்றியத்தின் பிரதான கிராமங்களில் ஒன்றான குருக்கள்பட்டி கிராமப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என கடந்த 2014 டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. எனினும் இதுவரை சிட்கோ தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. மிகவும் வறட்சியான மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதி மற்றும் அருகிலுள்ள ஆலங்குளம், சங்கரன்கோவில் ஒன்றியம் பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற குருக்கள்பட்டி தொழில் பேட்டையை விரைவாக அமைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.

Tags : Gurukulpatti ,government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...