பாண்டவர்மங்கலம் கோயிலில் நள்ளிரவில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது

கோவில்பட்டி, பிப். 19: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் கோயில் உண்டியலை நள்ளிரவில் உடைத்து பணத்தை திருடிய இருவரை போலீசார் கைதுசெய்தனர். கோவில்பட்டி அடுத்த பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து ராஜிவ்நகர் இபி காலனியில் கற்பகவிநாயகர் கோயில் உள்ளது. பூசாரியாக இருந்துவரும் சுப்பிரமணியன் (65) என்பவர் நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று அதிகாலை கோயில் நிர்வாகக் குழு உறுப்பினரான ராமச்சந்திரன் (70) என்பவர் அங்குசென்றபோது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு பதறினார். அத்துடன் அங்கிருந்த உண்டியலும் மர்மநபர்களால் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயில் தலைவர் முத்து (71) அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிந்த மேற்கு எஸ்ஐ முத்துவிஜயன் மற்றும் போலீசார், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். இதில் மந்தித்தோப்பு துளசிங்கநகரை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டனும் (24), வள்ளுவர்நகரை சேர்ந்த வள்ளிமுத்து மகன் கனகராசும் (28) ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ததோடு  உண்டியலில் திருடுபோன ரூ.300ஐ பறிமுதல் செய்தனர்.

Related Stories: