குறைந்தபட்சம் ரூ.7,850 பென்ஷன் கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோவில்பட்டியில் நூதன ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, பிப். 19: குறைந்தபட்சம் மாதம் ரூ.7,850 பென்ஷன் வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி  ஓய்வூதியர் சங்கத்தினர் கோவில்பட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 வீதம் பென்ஷன் வழங்க வேண்டும். மேலும் அகவிலைப்படி, குடும்ப  ஓய்வூதியம், மருத்துவப்படி, இலவச பேருந்து பயண அட்டை, குடும்ப நல நிதி  உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோவில்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி  ஓய்வூதியர் சங்க ஒன்றியத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஒன்றியச்  செயலாளர் இன்னாசிமுத்து, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரத்னாவதி, முன்னாள் மாவட்டத் தலைவர் மாரியப்பன்  வாழ்த்திப் பேசினர். ஓய்வூயர் சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்லத்துரை, வட்டாரப் பொருளாளர் கவுரி  உள்பட ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Related Stories: