×

எளாவூர் ஏழு கண் பாலம் அருகே மணல் கொள்ளை நாள்தோறும் அதிகரிப்பு

கும்மிடிப்பூண்டி, பிப். 19: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் ஏழு கிணறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில்  கண்ணன்கோட்டை, பூவலம்பேடு, பல்லவாடா, ஈகுவார்பாளையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பாலா கால்வாய்கள் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் ஏழு கண் மதகு வழியாக கடலுக்கு செல்கிறது. இதை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் நெற்பயிர், வேர்கடலை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களை மின்மோட்டாரை வைத்து விவசாயம் செய்கின்றனர். எளாவூர் ஏழு கண் பாலம் அருகே சுமார் பத்து கிலோ மீட்டர் நீளமும், அகலமும், 500 மீட்டர் தொலைவுக்கு மணற்பாங்கான இடங்கள் உள்ளது. இதனை மணல் கொள்ளையர்கள் சுமார் ஓராண்டாக இரவு நேரங்களில் மட்டும் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் மணல் திருடி சென்றனர். இதனால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இந்த மணல் கொள்ளையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ஆந்திராவில் இருந்து, தமிழகத்தில் மணல் நிறுத்தப்பட்டுள்ளதால் சாதாரண கூலி தொழிலாளி வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி கொண்ட மணல் கொள்ளையர்கள் ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மணற்பாங்கான இடத்தை தோண்டி அதிக லாபத்தை பார்க்கின்றனர்.இதனால் ஒரு சில ஏழை எளிய மக்கள் மணல் விலை அதிகமாக உள்ளதால் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்” என்றனர்.

Tags : Elavur Seven Eye Bridge ,
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...