×

எளாவூர் சோதனைச்சாவடியில் பரபரப்பு லாரியில் பதுக்கி கடத்தி வந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, பிப். 19: எளாவூர் சோதனை சாவடியில் மினி லாரியில் பதுக்கி கடத்திய 20 லட்சம் மதிப்பில் செம்மரக்கட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வழியாக ஆந்திரா, பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, எஸ்.ஐ முனிரத்தினம், சிறப்பு தலைமை காவலர் ராஜாராம் தலைமையில் போலீசார் எளாவூர் சோதனைச்சாவடியில் சோதனை நடத்தினர்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு மினி லாரி அதிவேகமாக வந்தது. அந்த மினி லாரியை போலீசார் மடக்கினர். ஆனால் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே அந்த வாகனத்தை போலீசார் துரத்தினர். பின்னர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று, அந்த வாகனத்ைத மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது மினி லாரியில் தர்பூசணி இருந்தது. அதன் அடியில் 20 லட்சம் மதிப்பிலான 44 செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. உடனே மினி வேனில் வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததும், அவர்கள், மாதவரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (28) மற்றும் பாதிரிவேடு பகுதியை சேர்ந்த வில்லியம்ஸ் டேவிட் (30) என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து மாதர்பாக்கம் வனத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்களிடம், செம்மரக்கட்டைகளையும், 2 வாலிபர்களையும் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Eravur ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...