×

வங்கியில் இருந்து பின் தொடர்ந்து சென்று மகளிர் சுயஉதவி குழு பெண்களிடம் 44 ஆயிரம் அபேஸ்

திருப்போரூர், பிப்.19: திருப்போரூர் வேண்டவராசி அம்மன் கோயில் தெருவை  சேர்ந்தவர் சின்னசாமி. பழைய மாமல்லபுரம் சாலையில் சிறிய மளிகைக் கடை  வைத்துள்ளார். இவரது மனைவி பார்வதி (50). மகளிர் சுய உதவிக்குழு  தலைவியாக உள்ளார். அதே குழுவில் செயலராக  பொன்னி என்பவரும் இருக்கிறார். இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் பார்வதி, பொன்னி ஆகியோர், திருப்போரூர் இந்தியன் வங்கிக்கு சென்றனர். அங்கு சுய உதவிக்குழு கணக்கில் இருந்து 44  ஆயிரம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர் திருப்போரூர் பிரணவமலை நுழைவாயில் அருகே சென்றபோது, பார்வதியின் முதுகில் ஒரு மர்மபொருள் பட்டு எரிச்சல் ஏற்பட்டது. இதனால் பதற்றத்துடன் வந்த அவர், தனது  கணவரின் மளிகைக் கடைக்குள் சென்று, பணம் மற்றும் கட்டைப் பையை வைத்து விட்டு,  முதுகில் ஏற்பட்ட எரிச்சலை போக்குவதற்காக தண்ணீர் ஊற்ற, கடையின்  பின் பக்கம் சென்றார். அவருக்கு உதவி செய்வதற்காக பொன்னியும் சென்றார். அந்த நேரத்தில் கடைக்கு வந்த ஒரு வாலிபர், கடையில் இருந்த சின்னசாமியிடம்  உங்கள் மனைவி பணத்தை கீழே போட்டுவிட்டார். அது உங்களுடையதா என  பாருங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது சின்னசாமி கடைக்கு வெளியே வந்து  சிறிது தூரத்தில் சிதறிக் கிடந்த 10 ரூபாய் தாள்களை எடுத்து வந்தார்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாலிபர், பார்வதி பணம் வைத்திருந்த கட்டைப்பையை எடுத்து கொண்டு, பைக்கில் தப்பிவிட்டார். அந்த கட்டைப்பையில் 44 ஆயிரம் ரொக்கம்  மற்றும் சுய உதவிக்குழுவின்  கணக்குப் புத்தகம், பார்வதி, பொன்னி ஆகியோரின்  செல்போன்கள் ஆகியவை  இருந்தன.  இதுகுறித்து, திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வங்கிக்குள்  மர்மநபர்கள் உலவுவதும், பணம் எடுத்து செல்பவர்களை, நோட்டமிட்டு  வெளியே காத்திருப்பவர்களிடம் தகவல் தெரிவிப்பதும் பதிவாகி இருந்தது. மேலும், மற்றொரு கடையில் இருந்த கேமராவில் மர்மநபர்,  பார்வதியின் பின்னால் பாட்டில் ஒன்றில் திரவத்துடன் பின் தொடர்ந்து செல்வது  பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபரை வலைவீசி தேடி  வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்: திருவண்ணாமலை மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, உண்ணமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் விஷ்ணுவரதன் (27). பெரும்புதூர் அடுத்த மாத்தூரில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் விஷ்ணுவர்தன், பெரும்புதூரில் இருந்து வீட்டுக்கு செல்ல, அவ்வழியாக சென்ற பைக்கில் லிப்ட் கேட்டு சென்று கொண்டிருந்தார். வடகால் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு வந்தது. உடனே மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டதில், பைக் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மினி லோடு வேன், விஷ்ணுவரதன் தலையில் ஏறி இறங்கியது. இதில் விஷ்ணுவரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பைக் ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம், குந்தன்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகசுதன் (25) படுகாயமடைந்தார். தகவலறிந்து ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், நாகசுதனை சிகிச்சைக்காகவும் பெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...