×

வில்லிப்பாக்கம் கிராமத்தில் அவலம் மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையம்

செய்யூர்,  பிப்.19: செய்யூர் அருகே சூனாம்பேடு ஊராட்சி வில்லிப்பாக்கம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்துள்ள நிலையில் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால், இங்குள்ள குழந்தைகள்  பெரும் அவதியடைகின்றனர். சூனாம்பேடு ஊராட்சி வில்லிப்பாக்கம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. தற்போது இந்த அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்துக்கு முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டிடத்தை புனரமைப்பதற்காக, மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பின் அனைத்து பணிகள் முடிந்த பின்னரும், இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் இங்கு மின்விசிறி வசதி இருந்தும் குழந்தைகள் கடும் புழுக்கத்தில் அவதிப்படுகின்றனர்.

மேலும் நாளுக்கு நாள் இந்த கட்டிடத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான முறையில் உள்ளதால் பெரும் விபரீதம் நேரிடும் அபாயமும் உள்ளது. இதனால் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை மையத்துக்கு அனுப்பவே அஞ்சுகின்றனர். அங்குள்ள பொதுமக்கள் அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி மின்இணைப்பு வழங்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, வில்லிப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி, அதற்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : center ,village ,Villipakkam ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்