×

சாலை விதி விழிப்புணர்வை கண்டறிய குமரியில் 100 இடங்களில் வாகன ஓட்டிகள் வீடியோ மூலம் பதிவு

நாகர்கோவில், பிப்.19:  குமரி மாவட்டத்தில் சாலை விதிகளை மதித்து எத்தனை பேர் வாகனங்கள் ஓட்டுகிறார்கள் என்பதை கண்டறிய, நேற்று ஒரே நாளில் 100 இடங்களில் போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.
தமிழகத்தில் பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறியதாக தினந்தோறும் 800 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யபப்படுகின்றன. சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்ைக 1000க்கு மேல் என பதிவாகி வருகிறது. ஒரு சில நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனாலும் விபத்துக்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. கடந்த 2019 ல் மட்டும், 211 பேர் பலியாகி உள்ளனர். இதில் பைக் விபத்துகள் தான் அதிகம். குடிபோதை, அதி வேகம், ரேஸ் மூலம் விபத்துகள் நடந்துள்ளன. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறது, பொதுமக்கள் மத்தியில் எந்தளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முக்கிய சந்திப்புகளில் வாகனங்களில் செல்பவர்களை போலீசார் வீடியோ பதிவு செய்தனர். போக்குவரத்து ஒழுங்குபிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் ஆங்காங்கே முக்கிய சந்திப்புகளில் நின்று படம் பிடித்தனர். நாகர்கோவிலில் வேப்பமூடு, மணிமேடை, செட்டிக்குளம், சவேரியார் ஆலய சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நின்று வீடியோ பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 100 இடங்களில் வீடியோ பதிவு நடந்ததாக, போலீசார் கூறினர்.  எத்தனை பேர் ஹெல்மெட் அணிந்துள்ளனர் என்பதை கண்டறிய இந்த வீடியோ பதிவு நடந்ததாகவும் போலீசார் கூறினர். அஞ்சுகிராமம் ஜேம்ஸ்டவுண் சந்திப்பு பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் டேனியல், ஏட்டுகள் மணிகண்டன், பத்மநாபன், சிவகுமார் ஆகியோர் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து, சர்வே எடுத்தனர்.

Tags : Motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...