×

திருப்போரூர் - ஆலத்தூர் இடையே மந்தகதியில் நடைபெறும் ஓஎம்ஆர் புறவழிச்சாலை பணி

திருப்போரூர், பிப்.19: திருப்போரூர் - ஆலத்தூர்  இடையே மந்தகதியில் நடைபெறும் ஓஎம்ஆர் புறவழிச்சாலை பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி  சிப்காட் வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலை 6 வழிப்பாதையாக உள்ளது. சிறுசேரியில்  இருந்து பூஞ்சேரி வரை 4 வழிப்பாதையாக உள்ள இச்சாலையில் படூர்,  கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல்  அதிகமாக இருப்பதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையொட்டி, படூர் -  தையூர் இடையே ஒரு புறவழிச் சாலையும், திருப்போரூர் - ஆலத்தூர் இடையே  ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. படூர் - தையூர்  இடையிலான புறவழிச் சாலை 4.67 கிமீ தூரத்துக்கும், திருப்போரூர் -  ஆலத்தூர் இடையிலான புறவழிச்சாலை 7.45 கிமீ தூரத்துக்கும் போடப்பட்டு  வருகிறது. இரண்டு புறவழிச் சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் ₹465 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த சாலைகளை அமைக்க  படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு,  திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி உள்ளிட்ட 13 கிராமங்களில்  நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக படூர்,  கேளம்பாக்கம் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வேகமாக  நடந்து வருகிறது.ஆனால், அடுத்த கட்டமாக திருப்போரூர் - ஆலத்தூர்  இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கினாலும், பணிகள் மந்த கதியில்  நடப்பதாக புகார் எழுந்துள்ளது. திருப்போரூர் - ஆலத்தூர் இடையேயான  புறவழிச்சாலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் கந்தசுவாமி  கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆகும். இதனால், நில கையகப்படுத்தலில் பெரிய  அளவில் சிக்கல் எழவில்லை. இந்த சாலை அமைப்பதற்காக செம்பாக்கம் ஏரியில் மண்  அள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தினமும் நூற்றுக்கணக்கான  லாரிகளில் மண் எடுத்து வந்து, விவசாய நிலங்களில் கொட்டி, முதற்கட்டமாக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில், கருங்கல் ஜல்லி சாலை  அமைத்தல், கான்கிரீட் கலவை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல்,  சாலையின் நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் இதுவரை தொடங்கவில்லை. இதனால், ஓரிரு வாகனங்கள் மட்டுமே சிறிய அளவிலான பணிகளை செய்து வருகின்றன.  புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் மட்டுமே பழைய மாமல்லபுரம் சாலையில் ஏற்படும்  போக்குவரத்தை சமாளிக்க முடியும் என்பதால், இச்சாலைப் பணியை மாவட்ட நிர்வாகம்  விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : OMR ,Thiruppore ,Alathur ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...