×

2 ஆண்டுகளுக்குள் 4 வழிச்சாலை பணி நிறைவு செய்யப்படும் ₹500 கோடியில் 48 பாலங்கள் அமைக்கப்படுகிறது

நாகர்கோவில், பிப்.19: குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலைக்கு ₹500 கோடியில் 48 பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வசந்தகுமார் எம்.பி தெரிவித்தார்.
நாகர்கோவில், வடசேரியில் உள்ள எம்.பி அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் நான்குவழி சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை குறித்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வசந்தகுமார் எம்.பி பெற்றுக்கொண்டார். திருவிதாங்கோடு அருகே சேவியர்புரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை நான்கு வழிச்சாலை 2 ஆக பிரிப்பதால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வசந்தகுமார் எம்.பி உறுதி அளித்தார். புத்தேரி பகுதியில் சாலையின் மறுபுறம் பாலம் அமைத்தல் தொடர்பாகவும் கோரிக்கை வைக்கப்பட்டன. அப்போது அங்கு இருந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் பொதுமக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பாலங்கள் அமைய இருப்பதாக தெரிவித்தனர். மேலும் 4 வழி சாலை பகுதிகளில் மொத்தம் 36 மேம்பாலங்கள், 10 இடங்களில் தரைவழி பாதைகள், 2 மேல்வழி பாதைகள் அமைக்க மொத்தம் 48 பணிகளுக்கு ₹500 கோடியில் டென்டர் விடப்பட இருப்பதாகவும், இந்த பணி முடிய 2 ஆண்டு ஆகும் என்றும் கூறினர். தற்போது நான்குவழி சாலை பணிகளுக்கு மண் எடுப்பது பெரும் சிக்கலாக இருந்து வருகிறது. சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் காரணமாக வனப்பகுதியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் மண் எடுக்க வழியில்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் பணி வேகமாக நடக்கவில்லை. 76 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளன என்று அவர்கள் கூறினர்.

இதையடுத்து வசந்தகுமார் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலை பணி நிறைவு பெற ₹500 கோடி மதிப்பில் 48 பாலங்கள் உள்ளிட்ட திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மார்ச் மாதத்தில்தான் இதற்கான டென்டர் பணி இறுதி நிலையை அடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு திட்ட காலம் 2 ஆண்டுகள் ஆகும். எனவே 2 ஆண்டுகளுக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் புத்தேரி பாலம் மட்டும் ₹36 கோடி மதிப்பில் 500 மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இது மிகப்பெரிய பாலமாக இருக்கும். இது தவிர பல்வேறு இடங்களில் பொதுமக்கள், நீர்நிலைகளை பாதிக்காத வகையில் பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதர சாலை பணிகள் அனைத்தும் ஏறக்குறைய நிறைவு பெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவு பெறும். ஆனால் பாலப்பணிகள் நிறைவு பெற்றால்தான் சாலை பணிகள் நிறைவு பெறும். இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். இதேபோல அவ்வப்போது குறை தீர்க்கும் கூட்டம் நடந்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED சாமியார்மடம் அருகே குழிக்குள் விழுந்தவர் மீட்பு