×

குமரி மாவட்டத்தில் கொளுத்தும் வெயில்

நாகர்கோவில், பிப்.19 : குமரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து நின்று போயுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் காணப்படுகின்ற நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான நீர்நிலைகள் வறட்சியின் பிடியில் சிக்க தொடங்கியுள்ளன. கால்வாய்கள் வறண்டு வருகின்றன. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 31.70 அடியாக இருந்தது. அணைக்கு 495 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில், 608 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

 பெருஞ்சாணி நீர்மட்டம் 50.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1ல் 11.94 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 142 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில், 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-2 நீர்மட்டம் 12.04 அடியாகும். பொய்கையில் நீர்மட்டம் 21.60 அடியாகும். மாம்பழத்துறையாறு அணையில் 47.08 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது.நாகர்கோவில் மாநகர பகுதிக்கு குடிநீர் வழங்கி வருகின்ற முக்கடல் அணையின் நீர்மட்டம் 17 அடியாகும். அணையில் இருந்து வினாடிக்கு 7.42 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் கொளுத்தி வரும் நிலையில் அணைகளில் இருந்து இம்மாதம் இறுதி வரை தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் அணைகள் மூடப்படும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் (93.2 பாரன்ஹீட்) ஆகும். வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறி உள்ளது. மாவட்டத்தில் இந்த மாதம் கோடை மழையின் அளவு குறைவாகவே இருந்து வருகிறது. இதுவே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க காரணமாக கருதப்படுகிறது. வெயில் கொளுத்தி வருவதால் பழக்கடைகள், ஜூஸ் கடைகளை மக்கள் அதிகம் நாடி வருகின்றனர். நோய்கள் பரவாமல் இருக்க சுகாதாரமான முறையில் இவை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வெயிலை சமாளிப்பது எப்படி?
* நிறைய தண்ணீர் குடிக்கலாம். நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். பயணத்தில் இருப்பவர்கள் தண்ணீர் பாட்டிலுடன் செல்வது நல்லது. மது பானங்களை பகல் நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
* இறுக்கமான, அடர் வண்ண ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
* முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் பகல் நேரங்களில் அதிக வெயில் நேரடியாக உணரும் வகையில் உள்ள பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்கலாம்.
* பள்ளி மாணவ மாணவியர் அமர்ந்துள்ள வகுப்பறைகளில் போதிய காற்றும், வெளிச்சமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
* வெப்பத்தால் மயக்கம் மற்றும் வேறு உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். மருத்துவ உதவி கிடைக்க செய்ய வேண்டும்.

Tags : Kumari District ,
× RELATED குமரி மாவட்டத்தில் அதிவேக டாரஸ் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்