கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் விற்ற கடைக்கு சீல்

அண்ணாநகர், பிப்.19: கோயம்பேடு  மார்க்கெட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களை கண்காணிக்கவும் பறிமுதல் செய்யவும் தனி குழுக்கள் அமைக்கப்பப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளாக இருந்தால் அவற்றை உடனடியாக சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தி உள்ளார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தடையை மீறி பல இடங்களில் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் விற்பதாக கோயம்பேடு நிர்வாக அலுவலர் கோவிந்தராஜுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அவரது தலைமையிலான அதிகாரிகள் நேற்று கடைகளில் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, 2 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது தெரியவந்தது.அங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 கடைகளுக்கு தாலா 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும், ஒரு கடைக்கு சீல் வைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: