×

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் அவதி குப்பைகளை எரிக்கும் கோயில் நிர்வாகம்

வேலூர், பிப்.19: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள குப்பைகளை அங்கேயே போட்டு எரிப்பதால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ₹900 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுஒருபுறம் இருக்க வேலூர் மாநகராட்சியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். இதனால் வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நகரின் எந்தப்பகுதியிலும் குப்பைத்தொட்டி கிடையாது. ஆனால் வேலூர் மாநகராட்சியின் மறுபக்கம் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது, மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கொண்டு செல்லப்படாமல் தெருக்கள், பாலாறு, பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கொட்டி தீயிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடு, வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலில் சேகரிக்கப்படும் குப்பைகளை கோயில் வளாகத்தின் வெளியே உள்ள காலி இடத்தில் கொட்டி அங்கேயே தீயிட்டு கோயில் நிர்வாகத்தினர் எரித்து வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: கோயில் அருகே குப்பைக்கழிவுகளை கொட்டி எரித்து வருகின்றனர். கோயில் தூய்மையை அடியோடு கெடுக்கும் பணியை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. காலை மாலை நேரங்களில் துப்புரவுப்பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கின்றனர். அதை மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தால் உரமாக தயாரிக்கப்படும். ஆனால் அதை நிர்வாகம் செய்வது இல்லை.

அடிக்கடி குப்பைகளை எரித்து வருவதால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சி என்ற பெயர் வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளது. இப்படி தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடையும். பொதுமக்களுக்கும் நோய்களை உண்டாக்கும். இதை மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : temple administration ,devotees ,complex ,Vellore Jalakandeswarar Temple ,
× RELATED சித்திரை திருவிழாவிற்கு தனிநபர்...