கிராம வீதிகளில் மெட்டல் குப்பை தொட்டிகளுடன் 300 ஊராட்சிகளில் பசுமை உரக்கிடங்குகள்

வேலூர், பிப்.19:மாநகராட்சி, நகராட்சிகளை ஒட்டி அமைந்துள்ள 300 கிராமங்களில் உரக்கிடங்குகள் அமைத்து அதன் மூலம் தயாரிக்கப்படும் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் நகரங்கள், பெரு நகரங்களில் உருவாகும் குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதை முறைப்படுத்தும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஜீரோ வேஸ்ட் என்னும் இலக்கை நிர்ணயித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 124 நகராட்சி மற்றும் 11 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் செயல்படும் பசுமை உரக் கிடங்குகளில் குப்பை மேலாண்மை திட்டம் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இதன் செயல்பாடுகள் திருப்தியுடன் நடைபெறுவதை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றன.

தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம ஊராட்சிகளில், மாநகராட்சிகள், நகராட்சிகளின் அருகில் இருக்கும் கிராம ஊராட்சிகளிலும், சற்றே பெரிய ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 300 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டததை செயல்படுத்துவதுடன், அக்கிராம ஊராட்சிகளில் பசுமை உரக்கிடங்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தால் உருவாக்கப்படும் உரங்கள் அனைத்தும் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு,விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக அரசு 90 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது.

இதன் மூலம் குப்பை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, அதில் இருந்து திடக்கழிவு, திரவக்கழிவுகள் தனியாக பிரித்தெடுக்கப்படும். அபாயகரமான கழிவுகளை தனியே பிரித்தெடுப்பதுடன், மறுசுழற்சிக்கு பயன்படாத குப்பையை தனியாக சேகரிக்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டு அரசின் ஆலோசனையின்படி அக்குப்பைகள் மேலாண்மை செய்யப்படும். வேலூர் ஒன்றியத்தில் குப்பம், பெருமுகை, சேக்கனூர், ஊசூர், கருகம்பத்தூர், சதுப்பேரி, அப்துல்லாபுரம், பாலமதி, பூதூர், அத்தியூர், மேல்மொணவூர் உட்பட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ெபரிய ஊராட்சிகள், நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் முதல்கட்டமாக 8 முதல் 15 மெட்டல் குப்பை தொட்டிகளுடன், பேட்டரி வண்டிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமம் தொடங்கி பெருநகரம் வரை குப்பை இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: