×

பின்னலாடை மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருப்பூர், பிப். 19:  சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக பின்னலாடை உற்பத்திக்கு  தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆலை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 சீனா குண்டூசி முதல் கம்ப்யூட்டர் சாதனங்கள், உதிரிபாகங்கள், இரும்பு தளவாடப்பொருட்கள். துணி வகைகள், பஞ்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், பின்னலாடை உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள், சாய ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் (சாய கலவைகள்) உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது. இவை அனைத்தும் உலக நாடுகளுக்கு குறைந்த விலைக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஐரோப்பா நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிக விலை கொடுத்து மற்ற நாடுகள் இறக்குமதி செய்தனர். இதனால், பணம் உள்ளவர்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் சீனா அதிக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதனால், பல்வேறு நாடுகள் தொழில்துறையில் வளர்ச்சி கண்டன. தொழிலாளியும் முதலாளியாக உருவெடுத்தனர்.  
 தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக நோய் பரவாமல் இருக்க சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. சீனாவில் விரைவில் இயல்பு நிலை திரும்பவில்லையெனில் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும் மற்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் பட்சத்தில் செயற்கையாக விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.

 இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நாகராஜன் கூறியதாவது: சாய ஆலைகளுக்கு தேவையான சாய கலவைகள் மற்றும் 75 சதவீதம் மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது 30 நாட்கள், 60 நாட்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு இல்லை. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் விரைவில் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புமென மருத்துவ துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நோய் தாக்குதல் நீடிக்கும் பட்சத்தில் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு