×

முற்றுகை போராட்டத்திற்கு பாதுகாப்பு கோரி இஸ்லாமியர்கள் கலெக்டரிடம் கோரிக்கை

திருப்பூர், பிப். 19:   இந்து அமைப்பினர் சார்பில் எங்கள் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு தர வேண்டும் என இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நேற்று கலெக்டர் விஜயாகார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்தனர்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர், அறிவொளி ரோட்டில் கடந்த 15ம் தேதி காலை முதல் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்றும் 4வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசும் குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று (19ம் தேதி) கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.   இது தொடர்பாக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், வருவாய் அலுவலர் சுகுமார், போலீஸ் எஸ்.பி.திஷா மித்தல், தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் செயலாளர் ஜக்ரியா தலைமையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில், இஸ்லாமியர்கள் கூறியதாவது: நாங்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் போராட்டத்தில் பெண்கள் அதிகமாக உள்ளனர். நாங்கள் எந்தவித அசம்பாவிதங்களிலும் ஈடுபடுவதில்லை. அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் காங்கயம் ரோடு சி.டி.சி கார்னரில் போராட்டத்தில் செய்தபோது இந்து அமைப்பான சிவசேனாவின் இளைஞரனி பொறுப்பாளர்கள் இடையூறு செய்தனார். மேலும், அவ்வப்போது இதுபோன்று இந்து அமைப்புகள் எங்களது போராட்டத்திற்கு பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். ஆகையால்  நாளை (இன்று 19ம் தேதி) நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்தில் எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு, பாதுகாப்பு அளித்தால் நாங்கள் அமைதியான முறையில் எங்களது கோரிக்கை வலியுறுத்தி பேரணியாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து திரும்பி செல்வோம். அதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் கேட்டுக்கொண்டனர்.  இதையடுத்து போலீசார் பாதுகாப்பு அளிக்கப்படும், அமைதியான முறையில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தை நடத்த வேண்டும் என கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Tags : Islamists ,Collector ,siege ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...