வாடகைக்கு பயன்படுத்தப்படும் சொந்த வாகனங்களால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு

கோவை, பிப்.19: கோவை மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வர்த்தக ரீதியில் வரி கட்டி இயக்கும் வாடகை கார் ஓட்டுநர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

தமிழகத்தில், மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் நம்பர் பிளேட்டுகளை போக்குவரத்துத் துறை வழங்குகிறது. சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு வெள்ளை நிறமும், வர்த்தக பயன்பாட்டுக்காக மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வர்த்தகப் பயன்பாடு எனில், அதற்கேற்ப வரி மாறுபடுகிறது. சொந்த பயன்பாட்டுக்கு சில வரிகள் விதிக்கப்படுவதில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி பலர் சொந்த பயன்பாட்டுக்கான கார்களை வர்த்தக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பல்வேறு வரிகளைச் செலுத்தி வாகனங்களை இயக்கி வரும் வாடகை வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து வாடகை கார் உரிமையாளர்கள் கூறுகையில், வர்த்தக ரீதியில் ஓட்டுவதற்கு ஆண்டுதோறும் வாகன தகுதிச் சான்றுக்காக கட்டணம் செலுத்துகிறோம். அதோடு, காப்பீட்டுத் தொகையும் அதிகமாக செலுத்துகிறோம். இதுபோக, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தையும் புதுப்பிக்கிறோம், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும்போது அனுமதிக் கட்டணத்தை செலுத்துகிறோம். ஆனால், இவை ஏதும் இல்லாமல் சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்கு விடும்போது எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
Advertising
Advertising

எனவே, தனிப்படைகளை அமைத்து அரசுக்கு வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதோடு, வாகனத்துக்கு ஏற்ப வரி ஏய்ப்புத்தொகையை செலுத்தினால் மட்டுமே வாகனம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். அப்போதுதான் முறைகேடுகள் குறையும். சொந்த பயன்பாட்டுக்கான கார், வாடகைக்காக பயன்படுத்தப்படும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கான இழப்பீடு கிடைக்காது. ஆனால், வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாடகை காரில் பயணிக்கும் பயணிகள் விபத்தில் சிக்கினால், பயணிகளுக்கு முழு இழப்பீடு கிடைக்கும் என தெரிவித்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூறுகையில், வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது வாடகை வாகனமாக இருந்தால் தற்காலிக அனுமதி (டிபி) வாங்கிச் செல்ல வேண்டும். ஆனால், சொந்த வாகனமாக இருந்தால் அனுமதி வாங்காமல் செல்லலாம். சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்காக இயக்கினால் குறைந்தபட்சம் ரூ.2,500ம், அதிகபட்சம் ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுகிறது.

வாடகைக்காக வாகனத்தை இயக்கினால் எந்தெந்த வரிகளை செலுத்த வேண்டுமோ அந்த வரிக்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மேலும், வாகன தகுதிச் சான்று (எப்.சி.), மாசு கட்டுபாட்டு சான்று (பி.யு.சி.) ஆகியவை இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்கிறோம். இதில், எப்.சி. இல்லையெனில் ரூ.500, பி.யு.சி. இல்லையெனில் ரூ.1,000, வாகனக் காப்பீடு இல்லையெனில் ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது. சில சுற்றுலா டாக்ஸி ஓட்டுநர்கள் இரண்டு வகையான கார்களையும் வைத்திருக்கின்றனர். அவர்கள் பயணிகளை வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாகனத்தில் அழைத்துச் செல்வதாக முன்பதிவு செய்துவிட்டு, சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாகன வாடகையை வசூலித்து விடுகின்றனர். இதனால், அவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்காக இயக்குபவர்கள் மீது  புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: