வெள்ளிங்கிரிமலை செல்லும் பக்தர்களுக்கு சோதனைக்கு பின்னரே அனுமதி

கோவை, பிப்.19:  வெள்ளிங்கிரிமலை சன்னிதானத்திற்குச் செல்லும் பக்தர்களால் சுற்றுப்புறச் சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் இருக்க பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் சோதனையிட்ட பின்னரே மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் மகா சிவராத்திரி விழா மற்றும் காரமடை அரங்கநாதசுவாமி கோயில் மாசிமகத் திருத்தேர்விழா ஆகிய விழாக்கள் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உட்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது:

பூண்டி அருகே உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ஆகிய  விழாக்கள் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது. அதேபோன்று காரமடை அரங்கநாதசுவாமி கோயிலில் மாசி மகத்தேர்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதேபோன்று இந்த ஆண்டும் வருகிற மகா சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு காவல்துறை மூலம் கோயில் வளாகம் மற்றும் வாகனம் நிறுத்தும் இடத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும். மருத்துவ துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழு தற்காலிக முகாம் அமைத்து பக்தர்களின் தேவைக்கேற்ப மருத்துவ உதவிகளை வழங்கவும், அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். வெள்ளிங்கிரிமலை சன்னிதானத்திற்குச் செல்லும் பக்தர்களால் சுற்றுப்புறச் சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் இருக்க பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் சோதனையிட்டு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், வன உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை அப்புறப்படுத்திய பின்னரே மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதிக்கவேண்டும்.

காரமடை அரங்கநாதசுவாமி கோயில் மாசிமகத் தேர்விழா நடைபெறுவதற்கு முன்பாக தேர் செல்லும் சாலைகளை சீர்செய்யவேண்டும். கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதி, கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவேண்டும்.தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத  வண்ணம் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை மூலம் தீயணைப்பு வண்டி மற்றும் பணியாளர்கள்  கோயில் வளாகத்திலே தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும்.  மேலும் பக்தர்களின் தேவைக்கேற்ப காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வரை போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கவேண்டும்.  வாகனங்களை நிறுத்த போதுமான இடம் ஒதுக்கீடு செய்யவேண்டும்.  திருவிழா நாட்களின் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Related Stories: