×

விவசாய மின் இணைப்பை வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

கோவை, பிப். 19:  கோவையில் விவசாய மின் இணைப்பை தவறாக வர்த்தகத்திற்கு பயன்படுத்திய நபருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து மின்வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை அடுத்த கணியூர் அருகேயுள்ள சங்கோதிபாளையத்தில் கனகராஜ் என்பவரின் விவசாய மின் இணைப்பை பயன்படுத்தி அருகில் உள்ள டீ கடைகள், தறி குடோன், மாவு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு விவசாய மின் இணைப்பின் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்தது. விவசாய மின் இணைப்பை பெயரளவில் பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு சார்பில் சோமனூர் செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து செயற்பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் மின்வாரிய திருட்டு தடுப்புபடை பிரிவு அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் நேற்று முன்தினம் விவசாய மின் இணைப்பு உள்ள இடத்தில் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது  விவசாய மின் இணைப்பை பயன்படுத்தி வர்த்தக நிறுவனங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மின் நுகர்வோருக்கு மின்வாரிய அதிகாரிகள் ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு