பதிமலை, கோவனூரில் அழியும் குகை ஓவியங்கள்

கோவை, பிப்.19: கோவையில் பதிமலை மற்றும் கோவனூரில் குகை ஓவியங்களை காக்க பாதுகாக்க கூடம் மற்றும் நினைவு சின்னம் அமைக்க பணிக்கு நிதி வழங்கப்படவில்லை. கோவை வாளையார் அருகேயுள்ள குமிட்டிபதி கிராமத்தில் பதிமலை குன்று உள்ளது. இங்கே பழங்கால குகை ஓவியம் காணப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டிற்கு முன் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பதிமலை குன்றில் முருகன் கோயிலும் உள்ளது. இதன் அடிவாரத்தில் ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பழங்காலத்தில் இந்த ஓவியங்களை வரைய வெண்மையான திரவம் பயன்படுத்தியுள்ளனர். யானைகளும் அதனை மனிதர்கள் கட்டுப்படுத்தி அழைத்து செல்லும் காட்சிகளும் ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது. 4 அடி அகலம், 2 உயரத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை எதிர்கால சந்ததிக்கு தகவலாக தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பதிமலை குன்றுகள் பாண்டியர்கள் சிலர் கல்வி பயின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வழுக்குபாறை, குமிட்டிபதி, முருகன்பதி, புதுப்பதி, சின்னாம்பதி, நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பாண்டியன் பள்ளி என இந்த பகுதியை அழைக்கின்றனர்.

குமிட்டிபதிக்கு அருகே வேலந்தாவளம் உள்ளது. வேளம் என்றால் யானை, தாவளம் என்றால் விற்பனை சந்தை என்ற பொருள் இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

வேலந்தாவளம் அருகே மாவுத்தம்பதி என்ற கிராமம் இருக்கிறது. யானை பாகனை மாவுத் என அழைக்கின்றனர். யானை பாகன்கள் வசிக்கும் இடமாக இருந்த பகுதி என்பதால் மாவுத்தம்பதி என பெயர் பெற்றது. பாலக்காடு கணவாய் வழியாக ஏராளமான யானைகளை பிடித்து ஆனைமலையில் வைத்து வளர்த்துள்ளனர். இங்கே குமுட்டிபதி, மாவுத்தம்பதியில் யானை படை உருவாக்கப்பட்டதாக கொங்கு நாட்டு வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகளை அடக்கிய வீரர்கள் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதிமலை குன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. மது, கஞ்சா கும்பலால் பாறை குகை ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பாலமலை கோவனூரிலும் குகை ஓவியங்கள் இருக்கிறது. வனத்திற்குள் உள்ள பாறைகளில் உருவாக்கப்பட்ட இந்த ஓவியங்கள் அழிந்து வருகிறது. இவற்றை சீரமைக்க தொல்லியல் துறைக்கு 30 லட்ச ரூபாய் நிதி கோரப்பட்டது. பராமரிப்பு கூடம் மற்றும் நினைவு சின்னம் அமைக்கவும், தொல்லியல் ஆய்வு மற்றும் பார்வையாளர்கள் சென்று வர அனுமதி வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டாக நிதி இல்லாமல் இந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவையின் வரலாற்றின் அடையாளமான குகை ஓவியங்கள் அழியும் அவல நிலையில் இருக்கிறது.

Related Stories:

>