மதுக்கரையில் குழாய் உடைப்பினால் 18 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை பாதிப்பு

கோவை, பிப்.19:  கோவை மதுக்கரை பேரூராட்சியில் 18 வார்டு உள்ளது. 9,100 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 முதல் 5 நாளுக்கு ஒரு முறை பில்லூர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2 மாதமாக 15 முதல் 17 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் வழங்கும் அளவும் 50 சதவீதம் வரை குறைந்து விட்டது. குறிப்பாக ஷூட்டிங் ரேஞ்ச், காந்தி நகர், மரப்பாலம், குரும்பபாளையம் ரோடு, மலைசாமி கோயில் வீதி, மதுக்கரை மார்க்கெட் பகுதிகளில் குடிநீர் சப்ளை முடங்கி வருகிறது. மதுக்கரை பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக தினமும் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. பேரூராட்சி அலுவலக வளாக பகுதியில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நில மட்ட தொட்டியில் நீர் சேகரித்து பகிர்மான குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்கப்படு–்கிறது. குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீர் முழுமையாக வருவதில்லை என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பாலக்காடு மெயின் ரோட்டில் மைல்கல் மற்றும் காந்திநகர் பஸ் ஸ்டாப் பகுதிகளில் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு 3 மாதத்திற்கு மேலாகி விட்டது. இந்த குழாய் சீரமைக்கப்படாமல் இருப்பதால் 20 முதல் 30 சதவீத குடிநீர் வீணாகி வருவதாக தெரியவந்துள்ளது. வீணாகும் குடிநீர் ரோட்டோர சாக்கடையில் பாய்கிறது. குழாயை சரி செய்து முறையாக குடிநீர் வினியோகிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: