முதலைமைச்சர் காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் பயனாளிகளை புகைப்படம் எடுக்கும் கேமரா பழுது

கோவை, பிப். 19: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அலுவலகத்தில் பயனாளிகளை படம் எடுக்கும் கேமரா அடிக்கடி பழுதாவதால் மக்கள் அவதியடைகின்றனர்.தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தரமான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ 1 லட்சம் வீதம், காப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாவட்டத்தில் இந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கு புதியதாக விண்ணப்பிப்பவர்கள் காப்பீடு அட்டை பெற மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும். ஆனால் இதற்காக பயன்படுத்தப்படும் கேமரா அடிக்கடி பழுதாவதால் மக்கள் அவதியடைகின்றனர். குறிப்பாக நோயாளிகள் இந்த திட்டத்தை அறிந்து விண்ணப்பிக்க வரும்போது இந்த காப்பீடு அட்டை பெற பலமுறை வரவேண்டியுள்ளது. எனவே இந்த கேமராக்கள் பழுதாகாதவாறு சீரமைத்து மக்கள் மற்றும் நோயாளிகளின் சிரமத்தை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: