நடப்பு கல்வியாண்டு முடிய உள்ள நிலையில் மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் வழங்க உத்தரவு

ஈரோடு, பிப்.19:நடப்பு கல்வியாண்டு முடிவடைய 2 மாதம் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் மாணவர்களுக்கு கணித உபகரணப்பெட்டி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் இலவச சீருடை, நோட்டு, புத்தகம், பை, பஸ் பாஸ், கணித உபகரணப்பெட்டி மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதில், இலவச சீருடைகள், நோட்டு, புத்தகங்கள் தவிர மற்றவை உரிய காலத்தில் வழங்கப்படாமல் உள்ளது.குறிப்பாக, மாணவர்களுக்கான பஸ் பாஸ் கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ளது. பழைய பஸ் பாஸ் கொண்டு மாணவர்கள் பயணித்து வரும் நிலை உள்ளது. இந்த வரிசையில் மாணவர்களுக்கு கணித உபகரணப்பெட்டி தற்போது தான் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் கணித உபகரணப்பெட்டி மாணவர்களுக்கு வழங்கவும் அதிலும் 15 மாவட்டங்களை சார்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கவும் பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், சென்னை, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்பட 15 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவச கணித உபகரணப்பெட்டிகளை பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: