11, 12ம் வகுப்பு வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு, பிப்.19: ஈரோடு மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 218 பள்ளிகளில் படிக்கும் 24 ஆயிரத்து 142 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதற்காக, 93 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இதில், ஈரோடு கல்வி மாவட்டத்தில் மட்டும் 8 ஆயிரத்து 463 பேரும், கோபிசெட்டிபாளையத்தில் 4 ஆயிரத்து 279 பேரும், பவானியில் 5 ஆயிரத்து 79 பேரும், பெருந்துறையில் 2 ஆயிரத்து 897 பேரும், சத்தியமங்கலத்தில் 3 ஆயிரத்து 424 பேரும் எழுதுகின்றனர். இதேபோல், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 218 பள்ளிகளில் படிக்கும் 24 ஆயிரத்து 337 மாணவ, மாணவியர் 91 மையங்களில் எழுதுகின்றனர்.

இதில், ஈரோடு கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 663 பேரும், கோபிசெட்டிபாளையத்தில் 4 ஆயிரத்து 177 பேரும், பவானியில் 5 ஆயிரத்து 30 பேரும், பெருந்துறையில் 2 ஆயிரத்து 950 பேரும், சத்தியமங்கலத்தில் 3 ஆயிரத்து 517 பேரும் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில், 5 கல்வி மாவட்டங்களுக்கு தேவையான 11, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் நேற்று தேர்வுத்துறை இயக்குநரகத்தில் இருந்து ஈரோடு வந்தது. ஈரோடு மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இருந்து பவானி, கோபி, சத்தி, பெருந்துறை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதோடு, சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Related Stories: