சிஏஏ.வுக்கு எதிராக இன்று முற்றுகை போராட்டம் முஸ்லிம் அமைப்பினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

ஈரோடு, பிப்.19:சிஏஏ.வுக்கு எதிராக இன்று முற்றுகை போராட்டம் நடத்துவது தொடர்பாக முஸ்லிம் அமைப்பினர் அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, முஸ்லிம் அமைப்புகள் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த ஒருங்கிணைப்பு பணி நடக்கிறது.  கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கு மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன் முன்னிலை வகித்தார். இதில், ஜமாத் உலமாக்கள் சபை தலைவர் பைசூர்ரகுமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் நூர்சேட், தமுமுக சித்திக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜாபர்சாதிக் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தை கைவிட வேண்டும். கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக லோட்ஸ் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே ரோட்டில் கூடி அமைதியான முறையில் தங்களது கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன் கூறுகையில்,`இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தை லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பகுதியில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ரோட்டில் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெருந்துறை மார்க்கமாக வரும் வாகனங்கள் கலெக்டர் அலுவலக ரோடு வழியாக ஈரோட்டிற்குள் செல்லும். மைக் செட் பயன்படுத்தலாம். காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு அமைதியாக செல்ல வேண்டும். அமைதியான முறையில் செயல்படும் வகையில் 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’ என்றார்.

Related Stories: