×

வாறுகால் பணியால் சாலையில் தேங்கும் கழிவுநீர்

சின்னமனூர், பிப். 18: சின்னமனூர் அருகே, குச்சனூரில் சாலையின் இருபுறமும் வாறுகால் பணியால் மெயின்ரோட்டில் கழிவுநீர் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் உள்ளது. இந்த ஊர் சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பேரூராட்சியில் உள்ள ராஜபாளையத்தில் தொடங்கி அரசு மேல்நிலைப்பள்ளி வரை ஒன்றரை கி.மீ தூரம் மெயின் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த மெயின் ரோட்டின் இருபுறமும் இருந்த கழிவுநீர் வாறுகால் அகலம் குறைந்ததாக இருந்தால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் ஆறாக ஓடும். இதில், கொசுக்கள் உருவாகி அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சுகாதாரக் கேட்டை உருவாக்கின. எனவே, வாறுகாலை அகலப்படுத்தி, கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நமது தினகரன் நாளிதழிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வாறுகாலை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, போடி சங்கராபுரம் பிரிவிலிருந்து சனீஸ்வர பகவான் கோயில் வரை மெயின் ரோட்டில் ஓரத்தில் ஜேசிபியால் தோண்டி வாறுகால் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக போடி விலக்கு பிரிவில் இருபுறமும், வாறுகால் கழிவுநீரை தடுத்துள்ளனர். இதனால், ரோட்டில் குளம்போல கழிவுநீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உருவாகி துர்நாற்றம் வீசுகிறது. வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. எனவே, கழிவுநீர் செல்ல முறையாக குழாய் பதித்து, வாறுகால் பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி