×

தினசரி ரூ.300 கூலி வழங்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் டெங்கு பணியாளர்கள் வலியுறுத்தல்

தேனி, பிப்.18: தேனி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள மஸ்தூர் பணியாளர்கள் தினசரி ரூ.300 ஊதியம் வழங்க வேண்டும் என தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வலியுறுத்தினர். போடி நகராட்சியில் பணிபுரியும் டெங்கு விழிப்புணர்வுக்கான மஸ்தூர் பெண் பணியாளர்கள் சுமார் 50 பேர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து, இப்பணியாளர்கள் தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து மஸ்தூர் பணியாளர்கள் கூறும்போது, ‘தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் சுமார் ஆயிரம் பேர் மஸ்தூர் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றோம். வீடுதோறும் சென்று டெங்கு பரவுவதை தடுக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு தற்போது தினந்தோறும் ரூ.213 மட்டும் கூலியாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.8 மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. தற்போதுள்ள விலைவாசிக்கு இந்த ஊதியம் கட்டுபடியாகவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் மஸ்தூர் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.300 ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : Dengue workers ,
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...