×

திருப்புத்தூரில் பராமரிப்பின்றி கிடக்கும் குளங்கள் சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

திருப்புத்தூர், பிப்.18:  திருப்புத்தூரில் உள்ள குளங்களில் தாமரை விதைகளை தூவி செடிகளை வளர விடுவதால் குடிண்ணீர் வீணாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகயில் 15க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊராணிகள் உள்ளன. இவை அனைத்தும் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்புத்தூர் புதுப்பட்டி அருகே உள்ள மருதாண்டி ஊரணியில் அப்பகுதியில் உள்ள புதுப்பட்டி மற்றும் என்.புதூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக குடிதண்ணீர் எடுத்து பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் கடந்த 2006-07 மாநில அரசின் நீராதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.12 லட்சம் மதிப்பில் இந்த ஊரணி சீரமைக்கப்பட்டு அதிலிருந்து குடிதண்ணீர் எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த ஊரணியில் தண்ணீர் இருப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருந்து வந்தது.

நாளடைவில், ஊரணியை முறையாக பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்கவில்லை. தற்போது ஊரணியில் தண்ணீர் உள்ள நிலையில், அதில் சிலர் வியாபார நோக்கத்துடன் தாமரை விதைகளை தூவி, அதில் வளரும் தாமரை மலர்களை யாருக்கும் தெரியாமல் இரவில் பறித்து செல்வதாக கூறப்படுகிறது. இந்த தாமரை செடிகள் குளம் முழுவதும் பரவிக்கிடப்பதால், நீர் மாசு படுகிறது. இதனால் ஊரணி தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதே போன்று புதுப்பட்டியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி கிடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் நல்ல நிலையில் இருந்தது. தற்போது அந்த குளத்திலும் தாமரை விதையை தூவி உள்ளதால், குளம் முழுவதும் தாமரை செடிகள் வளர்ந்து தண்ணீர் மாசுபட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் யாரும் இதை பயன்படுத்த முடியவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே இந்த இரண்டு ஊரணிகளில் உள்ள தாமரை செடிகளை அகற்றி சுத்தப்படுத்தி, தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தினால் குடிநீர் தேவையையும், நிலத்தடி நீரையும் நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக முன்வந்து இந்த ஊரணிகளில் உள்ள தாமரை செடிகளை அகற்றி, ஊரணியை சீரமைக்க வேண்டும். மேலும் ஊரணிகளில் தாமரை விதைகளை தூவிவிடுபவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்