×

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தேவை ரூ.9,000 கோடி; ஒதுக்கியது ரூ.700 கோடி பணிகள் மேலும் தாமதமாகும் விவசாயிகள் கடும் அதிருப்தி

சிவகங்கை, பிப்.18:  காவிரியாறு, வைகையாறு, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில் ரூ.700 கோடி ஒதுக்கீட்டால் பணிகள் மேலும் தாமதப்படும் என விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கொள்ளிடம் ஆறு வழியாக காவிரி நீர் பல ஆயிரம் கன அடி நீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. இந்நிலையில் சிவகங்கை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களின் நீர்தேவையை கணக்கில் கொண்டு காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த 2008ல் ரூ.3 ஆயிரத்து 290 கோடியில் அறிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூரில் காவிரியில் கதவணையும், அங்கிருந்து சுமார் 255 கி.மீக்கு கால்வாயும் அமைக்க திட்டமிடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் கல்லணை பகுதியில் இருந்து காவிரி, வைகை, குண்டாறு, ஆறுகள் இணைப்பு கால்வாய் தொடங்குகிறது. திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டம் வரை இந்த இணைப்பு கால்வாய் செல்கிறது. காவிரி மூலம் கொள்ளிடத்தில் தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலாறு, சிற்றாறு, முத்தாறு, சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளாறு, உப்பாறு, சருகணியாற்றுடன் இணைந்து செய்களத்தூர் அருகில் வைகையாற்றில் இணைக்கப்படுகிறது.

இங்கிருந்து விருதுநகர் மாவட்டம் குண்டாற்றில் இணைகிறது. கரூர் மாவட்டத்தில் 2 தாலுகா, திருச்சி மாவட்டத்தில் 2 தாலுகா, நாமக்கல்லில் 1 தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தாலுகா, சிவகங்கையில் 8 தாலுகா, விருதுநகரில் 3 தாலுகா, தூத்துக்குடியில் 2 தாலுகா என ஏழு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் உள்ள 3 லட்சத்து 37 ஆயிரத்து 717 எக்டேர்(8 லட்சம் ஏக்கர்) விவசாய நிலங்கள், குடிநீர் திட்டங்கள் இந்த இணைப்பு திட்டத்தின் மூலம் பயனடையும். முதற்கட்டமாக இத்திட்டத்திற்கென 2008ல் ரூ.234 கோடியில் மாயனூரில் கதவணை அமைக்கப்பட்டு 2014 ஜூனில் திறக்கப்பட்டது. இப்பணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசிடம் ரூ.11 ஆயிரம் கோடி நிதி மாநில அரசு கேட்டது. இதில் சுமார் 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை புதுக்கோட்டை மாவட்ட எல்கை வரையே பணிகள் முடிவடைந்துள்ளது. அதன் பின் மற்ற பணிகள் நடக்கவில்லை. தற்போதைய நிலையில் கால்வாய் அமைக்க ரூ.9 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக பொதுப்பணித்துறை சார்பில் கூறப்படுகிறது. ஆனால் தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியால் எவ்வித பயனும் இல்லாமல் திட்டம் மேலும் தாமதப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கூறுகையில், ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் பல ஆயிரம் கன அடி நீர் மற்றும் மழை நீர் தொடர்ச்சியாக கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து வருகிறது. காவிரி, வைகை, குண்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்த நீர் ஆறு மாவட்டங்களுக்கு பயன்பட்டிருக்கும். விவசாய சங்கங்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. குறைவான நிதி ஒதுக்கீடு செய்து பெயரளவிற்கே பணிகளை செய்வதால் சுமார் 12 ஆண்டுகளாக திட்டம் இழுபறியில் உள்ளது. இதனால் திட்டத்திற்கான செலவுத் தொகை பல மடங்கு அதிகரித்து வருகிறது. திட்டத்திகான முழு தொகையையும் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்து பணிகளை தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Cauvery ,Guntur ,Vaigai ,delays ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி