×

விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்

சிவகங்கை, பிப். 18: விவசாய கடன் அட்டைபெற ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாய கௌரவ நிதி பெறும் பயனாளிகள் அனைவருக்கும் விவசாய கடன் அட்டை வழங்க ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் 25.02.2020 வரை நடந்து வருகிறது. விவசாய கடன் அட்டைகளை குறுகிய காலத்தில் பெறுவதற்காக இம்முகாம்கள் ஊராட்சி அலுவலகங்களில் தினமும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ரூ.1.60 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் விவசாயிகள் வேளாண் இடுபொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கவும் மற்றும் உற்பத்திக்கு தேவையான நிதி உதவி பெறவும் முடியும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத தொழில்களுக்கு முதலீடு செய்ய கடன் பெறலாம். கடன் அட்டை பெறுவதற்கான எளிமையாக்கப்பட்ட ஒரு பக்க விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வங்கி கிளை அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோரிடம் வழங்கலாம். மேலும், விவசாயகள் தாங்கள் ஏற்கனவே பெற்ற விவசாய கடன் அட்டை காலாவதி ஆகியிருப்பின் அதனையும் இம்முகாம்கள் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். ஒரு விவசாயிக்கு ஒரே ஒரு விவசாய கடன் அட்டை மட்டுமே தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலமாகவோ அல்லது கூட்டுறவு வங்கி மூலமாகவோ வழங்கப்படும். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வங்கித்துறை அலுவலர்கள் சார்பில் நடைபெறும் இம்முகாமினை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Special Camp ,
× RELATED விவசாயக் கடன் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்