×

கடலாடி,பார்த்திபனூரில் நெல் கொள்முதல் திடீரென நிறுத்தம் *மூட்டைகளுடன் காத்திருப்பு *பணம் கிடைப்பதும் தாமதம்

சாயல்குடி, பிப்.18: கடலாடி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் இடவசதியின்றி நெல் வாங்குவதை நிறுத்தியதால் 15 நாட்களாக அவதிப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். கடலாடி பகுதியில் பிரதான மழையான வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதனால் முக்கிய பயிரான நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வந்தனர். சில இடங்களில் பயிர்களை மழைநீர் சூழ்ந்து நாசமாயின. பெரும்பாலான இடங்களில் நல்ல மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை செய்து வருகின்றனர். இப்பகுதியில் சம்பா, மட்டை, ஆடுதுறை 45, குளிஅடிச்சான், சித்திரைகாரி, புதியரகமான கோ 51, அண்ணா 4 போன்ற நெல் பயிரிடப்பட்டது. தற்போது விவசாயிகள் நெல் அறுவை இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்து நெல்லை பிரித்தெடுத்து மூட்டை கட்டி, டிராக்டர், லோடு வேன்களில் ஏற்றி கடலாடியிலுள்ள தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த 3 நாட்களாக போதிய இடம், பாதுகாப்பு வசதியில்லை எனக்கூறி அலுவலர்கள் நெல் மூட்டைகளை வாங்க மறுத்தும், வாங்கிய நெல் மூட்டைகளை எடை போடாமல் விவசாயிகளை 15 நாட்களாக காத்திருக்க வைத்திருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இது குறித்து மீனங்குடி வில்வதுரை, பாடுவனேந்தல் முத்துராமலிங்கம் கூறும்போது, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கிலோ ஒன்றிற்கு 19 ரூபாய் 5 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளி மார்க்கெட் வியாபாரிகளை காட்டிலும் நெல் ரகம், தரத்திற்கேற்ப ரூ.400 முதல் 600 வரை கூடுதலாக அரசு வழங்குவதால், ஆர்வத்துடன் அறுவடை செய்த நெல்லை தரம் பிரித்து மூட்டைகளில் கட்டி வயற்காட்டிலிருந்து டிராக்டர் மற்றும் லோடு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு தற்காலிக அரசு எடை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தோம்.

ஆனால் எடை கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றிற்கு குறிப்பிட்ட விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட எடை மட்டுமே அளவீடு செய்யப்படுவதால், டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் 15 நாட்களாகியும் எடை போடவில்லை. அரசு வாணிப கிடங்கியில் போதிய வசதிகள் உள்ள நிலையில், அங்கு வாங்காமல், தனியார் கோயில் வளாகத்தில் வாங்கி வந்தனர். கோயில் நிர்வாகம் இடத்தை காலி செய்ய சொல்லி விட்டதால் வாங்கிய நெல் மூட்டைகளை போதிய பாதுகாப்பின்றி ரோட்டில் வைத்துள்ளோம். இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எடை போடும் இயந்திரத்தை கொண்டு சென்று விட்டனர். நெல் வாங்குவதையும் நிறுத்தி விட்டனர்.

இதனால் நெல் மூடடைகளுடன் இரவு பகலாக காத்து கிடக்கும் நிலை உள்ளது. உரிய பதிலும் கிடைக்கவில்லை. மழை பெய்தால் அனைத்து நெல்லும் நனைந்து நாசமாகி விடும். கொண்டு வந்த நெல் மூட்டைகளை இங்கு எடை போடவும் முடியவில்லை. திரும்ப எடுத்துச் சென்று கடைகளிலும் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொள்முதல் நிலையத்தில் தாமதமின்றி மீண்டும் கொள்முதல் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து விவசாயி கூறுகையில், ‘‘விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை வாங்கும் அதிகாரிகள் உடன் பணம் கொடுக்காமல், வங்கி மூலமாக பணம் செலுத்தப்படும் என்று கூறுவதால், ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் மூட்டைக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை வசூலிக்கப்படுகிறது. இதன் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென மழை பெய்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால், கொள்முதல் பணியை விரைவுபடுத்த வேண்டும்’’ என்கின்றனர். அதிகாரி கூறுகையில், ‘‘இந்தாண்டு விவசாய பரப்பும், சாகுபடியும் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சோதனையிட்டு வருகின்றனர். எடை மோசடி, பணம் பெறுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க ஆயிரம் தார்ப்பாய்கள் வாங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Parthibanur ,Kadalladi ,
× RELATED கமுதி பகுதியில் நாளை மின்தடை